நீண்ட காலமாக இந்தியாவின் முதலாவது பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானியை பின்தள்ளி நேற்று திங்கள் அடானி (Gautam Adani) இந்தியாவின் முதலாவது செல்வந்தர் ஆகியுள்ளார். தற்போது அடானியிடம் $88.5 பில்லியன் சொத்துக்கள் உள்ளதாகவும், அம்பானியிடம் $87.9 பில்லியன் சொத்துக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் பெரும்பாலும் திடமான பெறுமதியை கொண்டிராத பங்கு சந்தை பங்குகளே.
அம்பானி பெருமளவு முதலீட்டை Facebook நிறுவனத்தில் செய்திருந்தார். அண்மையில் Facebook நிறுவன பங்கு பெரும் வீழ்ச்சி அடைந்த போது அம்பானியின் வெகுமதியும் வீழ்ந்து இருந்தது.
அடானியின் மிக வேகமான வளர்ச்சிக்கு இவருக்கும் இந்திய பிரதமர் மோதிக்கும் இடையில் நிலவும் நெருக்கமான உறவும் காரணம் என்று கூறப்படுகிறது. கொழும்பு துறைமுக East Container Terminal கட்டுமான வேலைகளும் போட்டிகள் இன்றியே அடானியின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருந்தது.
மும்பை பங்கு சந்தையில் பரிமாறப்படும் Adani Enterprises பங்கின் பெறுமதி 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தின் பின் சுமார் 10 மடங்கால் (1,000%) அதிகரித்து உள்ளது.
மோதியின் அரசு ஒரு திட்டத்தை அறிவிக்க சில மாதங்களுக்கு முன் அடானி அந்த துறையில் தீடீரென முதலீடு செய்து தன்னை தயார் நிலையில் வைத்திருப்பார். பின் அரச திட்டம் அடானிக்கு கிடைக்கும்.
மூன்று ஆண்டுகளில் அடானி இந்தியாவின் 7 விமான நிலையங்களை இயக்கும் பணியை பெற்று இருந்தார். அத்துடன் சுமார் 25% air traffic control பணியையும் அடானி பெற்று இருந்தார். இவை மிக இலாபகரமான சேவைகள்.
படிப்பை இடையில் முறித்து கல்லூரியில் இருந்து விலகி சென்ற அடானி 1980களில் வைர துறையில் தனது வர்த்தக முயற்சியை ஆரம்பித்து இருந்தார். அது நலமின்றி செல்ல, குயாரத் திரும்பி தனது சகோதரனின் பிளாஸ்டிக் வர்த்தகத்தில் இணைந்து செயற்பட்டார். 1988ம் ஆண்டு Adani Enterprises என்ற தனது வர்த்தகத்தை ஆரம்பித்து இருந்தார்.