அமெரிக்காவிடம் இருந்து நவீன நுட்பங்களை கொண்ட F-35 வகை யுத்த விமானங்கள் 50 ஐ UAE கொள்வனவு செய்ய இருந்தது. ஆனால் இன்று செவ்வாய் தாம் அந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக UAE கூறியுள்ளது. அமெரிக்காவிடம் இருந்து $23 பில்லியனுக்கு UAE செய்யவிருந்த கொள்வனவுகளில் மேற்படி 50 விமானங்களும் அடங்கி இருந்தன.
அமெரிக்காவின் Lockheed Martin என்ற நிறுவனம் தயாரிக்கும் F-35 யுத்த விமானங்களே அமெரிக்காவிடம் தற்போது உள்ள சிறந்த விமானங்கள் ஆகும்.
UAE சீனாவுடன் நெருக்கமான உறவை கொண்டிருந்ததால் அமெரிக்கா F-35 விமான கையளிப்பை இழுத்தடித்தது வந்தது. இழுத்தடிப்பால் விசனம் கொண்டதாலேயே UAE ஒப்பந்தத்தில் இருந்து விலகி உள்ளது என்று நம்பப்படுகிறது. ஆனாலும் UAE விமானத்தின் விலை மற்றும் தொழில்நுட்ப குறைபாடுகளையே அறிக்கையில் காரணம் காட்டியுள்ளது.
அபுதாபி சீன Huawei தயாரிக்கும் 5G தொலைத்தொடர்பு பொருட்களை கொள்வனவு செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை. ஏனைய அமெரிக்க சார்பு நாடுகள் Huawei தயாரிக்கும் 5G பொருட்களை தமது நாடுகளில் தடை செய்வதுபோல் UAE யையும் தடை செய்ய கேட்டிருந்தது. ஆனால் UAE அதற்கு இணங்கவில்லை.
F-35 யுத்த விமானங்கள் ஓடு பாதையில் ஓடி மேலேறுவது மட்டுமன்றி, நின்ற இடத்தில் இருந்து நிலைக்குத்தாகவும் மேலேறும் வல்லமை கொண்டன. இவை ஒலியின் வேகத்துடன் ஒப்பிடுகையில் 1.6 மடங்கு அதிக வேகத்தில் பறக்க வல்லன.