அமெரிக்க DOW பங்குச்சந்தை சுட்டி 1,570 புள்ளிகளால் வீழ்ச்சி 

அமெரிக்க DOW பங்குச்சந்தை சுட்டி 1,570 புள்ளிகளால் வீழ்ச்சி 

இன்று வியாழன் காலை அமெரிக்காவின் DOW JONES பங்குச்சந்தை சுட்டி 1,570 புள்ளிகளால் (அல்லது 3.6%) வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க சனாதிபதி ரம்பின் உலகளாவிய இறக்குமதி வரிகளால் உலக பொருளாதாரம் மிகவும் மந்த நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் அமெரிக்க பொருளாதாரமே அதிகம் பாதிக்கப்படும்.

அத்துடன் அமெரிக்காவின் S&P 500 சுட்டி 4% ஆலும், தொழில்நுட்ப பங்குகளை கையாளும் NASDAQ சுட்டி 4.9% ஆலும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

உலக அளவில் அமெரிக்க பங்குச்சந்தைகளே பாரிய வீழ்ச்சியை அடைந்தாலும் ஐரோப்பிய STOXX 600 2.34% ஆலும், ஜெர்மனியின் DAX 2.29% ஆலும், ஜப்பானின் Nikkei 225 2.77% ஆலும், ஹாங்காங் Hang Seng 1.52% ஆலும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

புதன்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $3,160 ஆக உயர்ந்து இருந்தது. இந்த ஆண்டு மட்டும் தங்கத்தின் விலை 19% ஆல் அதிகரித்து உள்ளது.