அமெரிக்க கரோனா உதவி பணத்திலும் கொள்ளை

அமெரிக்க கரோனா உதவி பணத்திலும் கொள்ளை

கரோனா அமெரிக்காவை உலுக்கியபோது பெரும்தொகை சிறு வர்த்தகங்கள் வருமான குறைவால் தவித்தன. அவை தொடர்ந்தும் தமது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது இருந்தது. அந்நிலையில் அமெரிக்க அரசு சிறு வர்த்தகங்களுக்கான Payment Protection Program (PPP) என்ற பண உதவி திட்டத்தை ஆரம்பித்தது.

PPP மூலம் அமெரிக்கா சுமார் $500 பில்லியன் பணத்தை இடரில் உள்ள சிறு வர்த்தகங்களுக்கு வழங்கியது. அரசு வேகமாக பெரும்தொகை பணத்தை வழங்க, திருட்டுகளும் வளர்ந்திருந்தன.

குறைந்தது 11,000 சந்தேகத்துக்குரிய PPP விண்ணப்பங்கள் தற்போது விசாரணையில் உள்ளன. அவற்றின் தொகை சுமார் $3 பில்லியன் என்றும் கூறப்படுகிறது.

Dallas நகருக்கு அண்மையில் உள்ள Coppell என்ற நகரில் வாழும் Dinesh Sah என்பவர் பொய்யான 11 நிறுவனங்களுக்கு PPP விண்ணப்பம் சமர்ப்பித்து $17.7 மில்லியன் பணம் பெற்றுள்ளார். இவரின் பொய்யான நிறுவனங்கள் PPP விண்ணப்பத்துக்கு சில தினங்களுக்கு முன்னரே பதிவு செய்யப்பட்டு உள்ளன.

தனக்கு கிடைத்த $17.7 மில்லியன் பணத்தில் Coppell வீட்டு கட்டுமானத்தையும், கலிபோனியாவில் இருந்த இரண்டு வீடுகளின் கட்டுமானத்தையும் முற்றாக கட்டி முடித்துள்ளார். அத்துடன் மேலும் 5 வீடுகளை அவர் கொள்வனவு செய்துள்ளார். அவை மட்டுமன்றி விலை உயர்ந்த ஒரு Bentley, ஒரு Porsche, ஒரு Corvette, இரண்டு Cadillac ஆகிய கார்களையும் அவர் கொள்வனவு செய்துள்ளார்.

தற்போது Sah கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்து அரசு $6 மில்லியன் பெறுமதியான சொத்துக்களை மீட்டு உள்ளனர். ஆனால் மிகுதி பணம் இந்தியாவுக்கு நகர்த்தப்பட்டு உள்ளதாக கூறும் அரசு அவற்றை மீட்பது கடினமாகலாம் என்றும் கூறுகிறது.