அமெரிக்க காங்கிரசின் (US Congress) பணிப்பிற்கு அமைய இராணுவ ஆய்வாளர் குழு ஒன்று தயாரித்த ஆய்வு அறிக்கையின்படி சீனாவின் இராணுவம் அமெரிக்காவின் இராணுவத்தின் பலத்துக்கு ஏறக்குறைய நிகரான நிலையை அடைந்துள்ளது.
இந்த மாதம் சமர்பிக்கப்பட்ட மேற்படி அறிக்கை Emerging Military Technologies: Background and Issues for Congress என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையின்படி தற்போது சீனாவே அமெரிக்க படைகளுக்கு மிகப்பெரிய ஆபத்து, ரஷ்யா அல்ல.
தென்சீன கடல், தாய்வான் போன்ற சீனாவை அண்டிய பகுதில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் போர் மூண்டால், அமெரிக்கா தோல்வியை தழுவும் சந்தர்ப்பம் அதிகம் என்கிறது இந்த அறிக்கை. ஆனாலும் அந்த அறிக்கையின்படி சீனாவை அண்டிய பகுதிகளுக்கு அப்பால் அமெரிக்காவே தொடர்ந்தும் பலமாக உள்ளது.
சீனாவின் இராணுவம் பழைய தொழில்நுட்பங்களை தவிர்த்து பெருமளவில் புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்திக்கிறது என்கிறது அந்த அறிக்கை. உதாரணமாக சீனா ஏற்கனவே DF-41 என்ற hypersonic glide ஏவுகணைகளை சேவையில் கொண்டுள்ளது. தற்போது கட்டுமானத்தில் உள்ள அவ்வகை ஏவுகணை அமெரிக்க படைகளுக்கு 2023 ஆம் ஆண்டு அளவிலேயே கிடைக்கும்.
Hypersonic ஏவல், Artificial Intelligence (AI), குவாண்ரம் தொழிநுட்பம் (quantum computing) ஆகிய மூன்றிலும் அமெரிக்காவிற்கும் மேலாக சீனா வளர்ந்து உள்ளது என்று கூறுகிறது மேற்படி அறிக்கை. அத்துடன் சீன இராணுவம் இந்த மூன்றையும் பெருமளவில் பயன்படுத்துகிறது என்கிறது அறிக்கை.
1997 ஆம் ஆண்டு சீனாவில் தொழிநுட்ப ஆய்வுக்கான செலவீனம் உலக மொத்தத்தின் 3% ஆக மட்டுமே இருந்தது. ஆனால் 2017 ஆம் ஆண்டில் அது 27% ஆக உயர்ந்து உள்ளது.