நேற்று புதன்கிழமை அமெரிக்காவின் விசேட படையினர் தற்போதைய ISIS குழுவின் தலைவர் Abu Ibrahim al-Hashimi al-Qurayshi தங்கி இருந்த வீட்டை சுற்றிவளைத்த நேரத்தில் குண்டு ஒன்றை வெடித்து தன்னையும், தன்னுடன் இருந்த 12 போரையும் பலியாக்கி உள்ளதாக அமெரிக்கா இன்று கூறியுள்ளது.
சிரியாவின் வடக்கே, துருக்கி எல்லையோரம் உள்ள Atmeh என்ற பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெறுள்ளது. பலியானோரில் Abu Ibrahim al-Hashimi al-Qurayshi யின் மனைவி, 4 பெண்கள், 6 சிறுவர்கள் ஆகியோரும் அடங்குவர்.
ISIS தலைவரின் இந்த இருப்பிடத்தை அமெரிக்கா கடந்த டிசம்பர் மாதமே அறிந்து இருந்ததாகவும், அதன் பின் தாக்குதலுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2020ம் ஆண்டு இவர் தொடர்பான தகவல்களுக்கு அமெரிக்கா $10 மில்லியன் சன்மானம் வழங்க முன்வந்திருந்தது.
Abu Ibrahim al-Hashimi al-Qurayshi முன்னர் சதாமின் ஆட்சியில் ஒரு இராணுவ அதிகாரியாக இருந்ததாகவும், பின்னர் அமெரிக்காவுக்கு எதிராக ஈராக்கில் சண்டையிட்டதாகவும், அதன் பின் அல்கைடாவுடன் இணைந்து இயங்கி பின் ISIS உடன் இணைந்ததாக கூறப்படுகிறது.
ISIS குழுவின் முன்னைய தலைவரான Abu Bakr al-Baghdadi யும் இவ்வாறே அமெரிக்க படைகள் சுற்றிவளைத்தபோது குண்டு வெடித்து தற்கொலை செய்து இருந்தார். அவரின் பின்னரே Abu Ibrahim al-Hashimi al-Qurayshi குழுவின் தலைவர் ஆனார்.
அமெரிக்கா தனது ஹெலி ஒன்றை இந்த தாக்குதலில் இழந்து இருந்தது. மீட்க முடியாத அதை அமெரிக்கா குண்டு போட்டு அழித்து இருந்தது.