யூக்கிறேனின் பலம், பலவீனம் இரண்டையும் கருத்தில் கொள்ளாது பைடென் காலத்து அமெரிக்காவின் ஆயுத, பண உதவிகளில் மயங்கி ரஷ்யாவுடன் யுத்தத்துக்கு சென்ற யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கி தற்போது ரம்ப் ஆட்சியில் கைவிடப்பட்டு செய்வதறியாது முழிக்கிறார்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை முறியடிக்க இதுவரை காலமும் பைடென் அரசு சுமார் $500 பில்லியன் யுத்த உதவிகளை செய்திருந்தது. இந்த உதவிகளை யூக்கிறேன் அமெரிக்காவுக்கு திருப்பி செலுத்தவேண்டும் என்று பைடென் அரசு நிபந்தனை எதையும் முன்வைத்திருக்கவில்லை.
ஆனால் தற்போதைய ரம்ப் அரசு $500 பில்லியன் பெறுமதியான யூக்கிறேன் கனியங்களை அமெரிக்காவுக்கு வழங்கவேண்டும் என்று கூறுகிறார். செலன்ஸ்கி சில தினங்களில் வெள்ளை மாளிகை சென்று கனிய ஒப்பந்தம் (agreement) ஒன்றில் கையொப்பம் இடுவார் என்றும் ரம்ப் கூறியுள்ளார்.
ஆனால் இது ஒரு ஒப்பந்தம் அல்ல என்றும், ஒரு புரிந்துணர்வு (framework) மட்டுமே என்கிறார் செலன்ஸ்கி. விரைவில் இடம்பெறவுள்ள செலன்ஸ்கியின் வெள்ளை மாளிகை பயணம் உண்மையை வெளிப்படுத்தும்.
யூக்கிறேன் கனியத்தை அமெரிக்கா பெறுவதானால், அமெரிக்கா யூகிறேனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்கிறார் செலன்ஸ்கி. ஆனால் அது அமெரிக்காவில் வேலை அல்ல என்கிறார் ரம்ப்.
தற்போது ரம்ப் கொண்டுள்ள இணைக்க வரைபு அமெரிக்கா “supports Ukraine’s efforts to obtain security guarantees needed to establish lasting peace” என்கிறது. இதில் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதம் குறிப்பிடப்படவில்லை.
அத்துடன் யூக்கிறேன் NATO அணியில் இணைத்துக்கொள்ளப்படாது என்று ரம்ப் ஏற்கனவே கூறியுள்ளார். ரஷ்யாவின் யூக்கிறேன் மீதான ஆக்கிரமிப்புக்கு யூக்கிறேனின் NATO அங்கத்துவ கனவே பிரதான காரணம்.
(யூக்கிறேனின் நிலைமை ஒன்றும் புதிதல்ல. இலங்கை தமிழரும் இந்தியா ஈழம் பெற்றுத்தர முன்வந்துள்ளது என்று நம்பி சிங்களத்துடன் சண்டைக்கு சென்று உடுத்து இருந்ததையும் இழக்க, எரிகிற வீட்டில் பிடுகிறது இலாபம் என்று இந்தியா தற்போது தமிழர் பகுதிகளில் இருந்து பெரும் பொருளாதார இலாபம் அடைகிறது.)