அண்மையில் ஐ.நா. வின் கண்டனத்துக்கும் அதிகரித்த தடைகளுக்கும் உள்ளான வடகொரியா தனது ஏவுகணைகள் மூலம் அமெரிக்காவை குறிவைக்கப்போவதாக கூறியுள்ளது. அத்துடன் தாம் 3ஆம் அணுவெடிப்பு பரிசோதனைகளையும் செய்யவுள்ளதாக கூறியுள்ளது.
கடந்த மார்கழியில் வடகொரியா நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணை ஒன்றை செய்மதி ஒன்றை அனுப்புவதன்மூலம் பரிசோதனை செய்திருந்தது. அதன் பின்னரே ஐ.நா. தண்டனைகளை அதிகரித்திருந்தது.
Institue for Science and International Security இன் கருத்துப்படி வடகொரியா 2016 ஆம் ஆண்டளவில் 21 முதல் 32 எண்ணிக்கையிலான அணுக்குண்டுகளை வைத்திருக்கும்.
அந்நிய படைகளால் யுத்தகளமாக்கப்பட்ட கொரியா 1953 ஆம் ஆண்டில் வடக்கு, தெற்கு ஆக பிரிக்கப்பட்டது. அன்றுமுதல் ஒரு யுத்த ஓய்வே இங்கு உள்ளது, சமாதான உடன்படிக்கைகள் எதுவும் இல்லை. தற்போது தென்கொரியாவில் சுமார் 28,000 அமெரிக்கப்படைகள் உள்ளன.
வடகொரியாவின் நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு தலையிடியாகவும், ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்றவற்றின் நடவடிக்கைகள் சீனாவுக்கு தலையிடியாகவும் உள்ளது.