அமெரிக்காவின் தேசிய புலனாய்வு (National Intelligence) பிரிவின் அதிகாரி இன்று அமெரிக்க காங்கிரசுக்கு வழங்கிய உரையில் சீனாவே தற்போது அமெரிக்காவின் முதல் ஆபத்து என்றுள்ளார். இரண்டாவதாக ரஷ்யா உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் CIA, FBI, NSA, Defense Intelligence Agency ஆகியவற்றின் அதிகாரிகளும் மேற்படி கணிப்பை ஆதரித்து இருந்தனர்.
சீனா வளர்ந்து வரும் தனது இராணுவ, பண, தொழில்நுட்ப, இராசதந்திர வல்லமைகளை ஒருங்கிணைத்து பயன்படுத்தி உலக அளவில் உள்ள அமெரிக்காவின் ஆளுமையை தன் வசம் இழுக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் அணு ஆயுதங்கள், ஏவுகணைகள், யுத்த கப்பல்கள், யுத்த விமானங்கள் போன்ற பாரிய ஆயுதங்கள் தொடர்ந்தும் தரமாகி வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இணைய தாக்குதலும் பிரதான ஆபத்தாக கூறப்பட்டுள்ளது. அண்மையில் அமெரிக்காவின் SolarWind என்ற பாதுகாப்பு software கொண்டிருந்த வலுவை அறிந்து அந்த வழு ஊடாக பல்லாயிரம் அமெரிக்க திணைக்களங்கள், நிறுவனங்கள் தாக்கப்பட்டு இருந்தன. அதற்கு ரஷ்யாவே காரணம் என்கிறது அமெரிக்கா.
முன்னாள் சனாதிபதி ரம்ப் புலனாய்வுகளை உதாசீனம் செய்ததால் கடன் இரண்டு ஆண்டுகளாக இவ்வகை புலனாய்வு அறிக்கைகள் காங்கிரசுக்கு வழங்கப்பட்டு இருக்கவில்லை.