அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் நசியும் கனடா

ChinaCanada

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் பொருளாதார மற்றும் அரசியல் யுத்தத்துள் அகப்பட்டு நசிகிறது கனடா. அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க கனடா சீனாவின் Huawei நிறுவனத்தின் CFO Meng Wanzhou என்பவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும் நோக்கில் வீட்டுக்காவலில் வைத்துள்ளதே சீனாவின் விசனத்துக்கு முக்கிய காரணம்.
.
சீனாவின் பொருளாதாரத்துக்கு கனடா முக்கியம் இல்லாதமையும், ஆனால் கனடாவுக்கு சீனாவின் சந்தை முக்கியமாக இருப்பதுவும் கனடாவை நெருக்கடியில் வைத்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து சீனாவுக்கே கனடா அதிக ஏற்றுமதி செய்கிறது.
.
Meng Wanzhou கைதின் பின் கனடா தனது கனோலா எண்ணெய்யை (canola oil) சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது உள்ளது. சீனா சட்டப்படி கனடாவின் எணெய்யை தடுக்காது, வழமைக்கு மாறான முறையில் சோதனைகளை செய்து ஏற்றுமதியை குழப்பி வருகிறது.
.
கடந்த வருடம் கனடா $2.7 பில்லியன் கனோலா எணெய்யை சீனாவுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. அவை அனைத்தும் தற்போது முடங்கி உள்ளன. அதனால் Richardson International, Viterra ஆகிய இரண்டு கனடிய கனோலா எண்ணெய் நிறுவனங்களும் பலத்த நடத்தில் உள்ளன. சீனாவுக்கு விற்பனை செய்ய முடியாத கனோலா எண்ணெய் மிக குறைந்த விலையில் பாகிஸ்தான், பங்களாதேசம் போன்ற நாடுகளுக்கு தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
.
சீனாவுக்கான கனடாவின் பன்றி இறைச்சி ஏற்றுமதியும் தடைப்பட்டு உள்ளது. கடந்த வருடம் கனடா $514 மில்லியன் பெறுமதியான பன்றி இறைச்சியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்திருந்தது.
.
சீனாவுக்கான சோயா ஏற்றுமதியும் தடைப்பட்டு உள்ளது. கடந்த வருடம் கனடா $1.7 பில்லியன் பெறுமதியான சோயாவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்திருந்தது.
.
அத்துடன் சீனா அங்கு பயணித்து இருந்த Michael Kovrig, Michael Spavor ஆகிய இரண்டு கனடியர்களை கைதும் செய்துள்ளது. மூன்றாம் நபரான Robert Schellenberg என்பருக்கு போதை கடத்தினார் என்ற குற்றம் தொடர்பாக மரண தண்டனையும் விதித்துள்ளது.

.