அமெரிக்காவின் Florida மாநிலத்தில் 98 kg (216 இறாத்தல்) எடையும், 5 மீட்டர் (18 அடி) நீளமும் கொண்ட மலைப்பாம்பு (Burmese python) ஒன்று அகப்பட்டு உள்ளது. இந்த பெண் பாம்பு 122 முட்டைகளை கொண்டிருந்தது. இந்த பாம்பு கடந்த டிசம்பர் மாதம் அகப்பட்டு இருந்தாலும் தற்போதே விபரம் வெளிவந்து உள்ளது.
தொலைத்தொடர்பு கருவிகள் பொருத்தப்பட்ட Dionysus என்ற பெயர் கொண்ட ஆண் பாம்பு ஒன்றின் உதவியுடனேயே மேற்படி பெண் பாம்பு பிடிக்கப்பட்டு உள்ளது. இது சுமார் 20 ஆண்டு வயதுடையது. அதனால் இது முதலில் விடப்பட்ட பாம்பாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இந்த வகை மலைப்பாம்புக்கு புளோரிடாவில் எதிரி விலங்குகள் எதுவும் இல்லை. அதனால் இவை தடை எதுவும் இன்றி பெருகி வருகின்றன. அத்துடன் புளோரிடா சதுப்பு நிலங்களில் வாழும் அனைத்து உயிரினங்களையும் இவை வேகமாக அழித்து வருகின்றன.
யாரோ வளர்ப்பு மலைப்பாம்புகளை வெளியே விட்டதாலேயே அங்கு மலைப்பாம்பு பெருகியதாக கூறப்படுகிறது. Burmese python பாம்புகள் அப்பகுதிக்கு உரிய பாம்பு அல்ல. ஆனால் தற்போது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மலைப்பாம்புகள் தொகையிலும் அதிகம் தொகை கொண்ட பாம்புகள் புளோரிடாவில் உள்ளன.
2013ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 1,000 மலைப்பாம்புகள் அங்கு கைப்பற்றப்பட்டு உள்ளன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 5ம் திகதி முதல் 14ம் திகதி வரை இடம்பெறும் மலைப்பாம்பு பிடிக்கும் போட்டியில் பலநூறு பேர் பங்கு கொள்வர். அதிகம் பாம்பு பிடிப்பவருக்கு $2,500 பரிசும், நீளமான பாம்பை பிடிப்பவருக்கு $1,000 பரிசும் வழங்கப்படும். பிடிபடும் அனைத்து பாம்புகளும் உரிய முறையில் அழிக்கப்படும்.