சில தினங்களுக்கு முன் உலகின் 3வது பெரிய செல்வந்தராக இருந்த அதானியின் (Gautam Adani) நிறுவனங்கள் இன்று திங்கள் மேலும் பெருமளவு பங்கு சந்தை வெகுமதியை இழந்துள்ளன.
அதானி நிறுவனங்கள் கடந்த 3 தினங்களில் சுமார் $65 பில்லியன் பங்கு சந்தை பெறுமதியை இழந்துள்ளன. அந்த பங்குகளை கொண்டிருந்த அதானியும் 3 தினங்களில் உலகின் 3வது செல்வந்தர் நிலையில் இருந்து தற்போது 8வது செல்வந்தர் ஆகியுள்ளார்.
அதானியின் இந்த நிலைக்கு அமெரிக்காவின் Hindenburg Research என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றே காரணம். அந்த ஆய்வு அதானி நிறுவனங்கள் கணக்கியல் குளறுபடிகள் செய்கின்றன என்று கூறியுள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் பினாமி வங்கி கணக்குகளையும் கொண்டன என்கிறது.
அதானி Hindenburg Research கூறும் குற்றச்சாடுகளை மறுக்கிறார்.
தற்போது அதானி மேலும் 45.5 மில்லியன் புதிய பங்குகளை விற்பனை செய்ய முயன்றாலும், 1.4 மில்லியன் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அது சுமார் 3% மட்டுமே. அவையும் எதிர்பார்த்தத்திலும் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதானி பிரதமர் மோதிக்கு நெருக்கமானவர். இந்தியாவின் விமான நிலையங்கள், துறைமுகங்கள், வர்த்தக வான் பரப்புகள் போன்ற பல அரச வர்த்தகங்களை இயக்கும் உரிமையை போட்டி இன்றி பெற்றவர். கொழும்பு துறைமுகமும் அதானி நிறுவனத்துக்கு போட்டி இன்றி வழங்கப்பட்டது.
அண்மையில் NDTV என்ற செய்தி சேவையையும் அரசியல் பலத்தை பய்னபடுத்தி அதானி கொள்வனவு செய்திருந்தார்.