அமெரிக்க விஞ்ஞானிகள் நாளை செவ்வாய் அணு இணைவு மூலம் (fusion) சக்தியை உருவாக்கும் புதிய வழிமுறை ஒன்றை அறிவிக்க உள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் Livermore நகரத்தில் உள்ள Lawrence Livermore National Laboratory என்ற ஆய்வு கூட்டமே இந்த புதிய வழிமுறையை கண்டுபிடித்துள்ளது.
இவ்வாறு வெப்பத்தை உருவாக்குவது இதுவே முதல் தடவை. இந்த வழிமுறை நடைமுறைக்கு சாதகமானால் உலகம் எங்கும் சூழல் மாசடையாத வகையில் சக்தியை பெறலாம். அதனால் அழுக்கான எண்ணெய் மூலம் சக்தியை பெறுவதை நிறுத்தலாம்.
இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அணுக்கள் (atoms) ஒன்றாக இணைக்கப்படும் வேளையில் (fusion) அந்த செயல்பாடு அதிக அளவு சக்தியை வெப்பமாக வெளியிடுகிறது. இந்த வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் போன்ற வேறு சக்திகளை உருவாக்கலாம்.
சூரியனிலும் இவ்வாறு fusion மூலமே வெப்பம் உருவாகிறது என்று கருதப்படுகிறது.
தற்போதைய அணு மின் நிலையங்களில் அணுவை பிரித்து (fission) சக்தியை பெறும் வேளையில் பாதகமான கதிரியக்க (radioactive) விளைவுகள் தோன்றும். ஆனால் fusion வழிமுறை அவ்வாறு பாதகமான விளைவுகளை கொண்டிருக்கவில்லை.
Fission வழிமுறைக்கு Uranium (U), Plutonium (Pu) ஆகியன பயன்பட, fusion வழிமுறைக்கு Hydrogen (H) பயன்படுகிறது.
இந்த புதிய அணு இணைவு (fusion) செயல்முறை சுமார் 100 மில்லியன் C வெப்பத்தை உருவாக்கும். இந்த வெப்பம் சூரியனின் வெப்பத்திலும் சுமார் 10 மடங்கு அதிகம்.