அடானியை வளர்க்கிறார் பிரதமர் மோதி?

அடானியை வளர்க்கிறார் பிரதமர் மோதி?

இந்தியாவின் தற்போதைய இரண்டாவது பெரிய செல்வந்தர் அடானியே (Gautam Shantilal Adani). அம்பானிக்கு அடுத்து தற்போது இவரே இந்தியாவின் பெரிய செல்வந்தர். இவர் 1981ம் ஆண்டில் தனது சகோதரனின் பொலித்தீன் இறக்குமதியில் தனது வர்த்தக முயற்சிகளை ஆரம்பித்து இருந்தாலும் அண்மை காலங்களிலேயே அவர் வேகமாக பெரும் செல்வந்தர் ஆனார்.

குறிப்பாக மோதி ஒவ்வொரு புதிய அரச கொள்கைகளை அறிமுகம் செய்யும் காலத்தில் அடானி அந்த துறையில் வர்த்தகம் செய்ய ஆரம்பித்து வருகிறார். நீண்ட காலமாக நிலக்கரியை பெரும் நோக்கமாக கொண்ட இவரின் வர்த்தகம் தற்போது துறைமுகம், விமான நிலையம், data center, பாதுகாப்பு ஆகிய துறைகளில் வேரூன்றி வருகிறது.

இவரின் Adani நிறுவனமே கொழும்பு துறைமுகத்தின் மேற்கு துறைமுகத்தை (WCT) கட்டி, இயக்கவுள்ளது. இலங்கை கேள்விகள் எதுவும் இன்றி WCT வர்த்தகத்தை அடானிக்கு வழங்க மோதியே காரணமாக அமைந்திருக்கலாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அடானி இந்தியாவின் 7 விமான நிலையங்களை இயக்கும் வர்த்தகத்தை பெற்றுள்ளார். அத்துடன் அங்கு சுமார் 25% வான்பரப்பு கட்டுப்பாட்டு (air traffic) வர்த்தகத்தையும் அவர் பெற்றுள்ளார். முன் அனுபவம் இல்லாத அடானி நிறுவனம் எவ்வாறு விமான நிலைய வர்த்தகங்களை பெற்றது என்று கேட்கப்படுகிறது.

கேரளாவில் அடானி பெற்றுக்கொண்ட விமான நிலைய வர்த்தகம் தற்போது நீதிமன்ற வழக்கில் உள்ளது. அந்த வர்த்தகத்தை பெற 86 நிறுவனங்கள் (bidders) முனைந்து இருந்ததாகவும், ஆனால் அடானியே வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

மோதி இந்தியாவுக்கு தேவையான இராணுவ தளபாடங்களை இறக்குமதி செய்யாது, அவற்றை இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்ற கொள்கையை அறிவித்த அதே காலத்தில் முன் அனுபவம் இல்லாத அடானி பாதுகாப்பு வர்த்தகத்தையும் ஆரம்பித்து உள்ளார்.

Google, Facebook போன்ற இணையங்கள் இந்திய மக்களின் தரவுகளை (data) இந்தியாவிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற கொளகையை மோதி நடைமுறை செய்த அதே காலத்தில் முன் அனுபவம் இல்லாத அடானி data center வர்த்தகத்தையும் ஆரம்பித்து உள்ளார்.

மோதி, அடானி, அம்பானி ஆகியோர் குயாரத் மாநிலத்தவர். மோதிக்கும் அடானிக்கும் இடையேயான உறவுகள் 2002ம் ஆண்டுக்கு முன்னிருந்து தொடர்கின்றது. 2002ம் ஆண்டில் மோதி குயாரத் வன்முறைகள் காரணமாக நெருக்கடியில் இருந்தபோது அடானி மோதியின் கரத்தை வலுப்படுத்த உதவிகள் செய்தவர்.