இலங்கையில் smartphone IMEI பதிவு

இலங்கையில் smartphone IMEI பதிவு

இலங்கையில் பயன்படுத்தப்படும் smartphone தொலைபேசி சேவைகள் விரைவில் IMEI அடையாள இலக்க (ID) பதிவுக்கு உட்படுத்தப்படும் என்று Telecommunication Regulatory Commission of Sri Lanka கூறியுள்ளது.

ஒவ்வொரு வாகனத்துக்கும் அடையாளமாக VIN (Vehicle Identification Number) இலக்கம் இருப்பதுபோல் ஒவ்வொரு smartphone களுக்கும் அடையாளமாக IMEI (International Mobile Equipment Identity) இலக்கம் உள்ளது. உலகம் முழுவதும் ஒரு தொலைபேசிக்கு ஒரு IMEI ஆக இருக்கும். இது 15 இலக்கங்களை கொண்டது.

இந்த IMEI இலக்கம் பின்புற மூடியின் உள்ளே பொதுவாக பதியப்பட்டு இருக்கும். அல்லது dialpad டில் *#06# என்ற code ஐ அழுத்தினால் அந்த தொலைபேசிக்குரிய IMEI இலக்கம் காண்பிக்கப்படும்.

மேற்கு நாட்டு தொலைபேசி சேவை நிறுவனங்கள் தாம் விற்பனை செய்த smartphone IMEI களை கொண்டவற்றுக்கு மட்டுமே சேவையை வழங்கும். தொலைபேசிகளை locking/unlocking இந்த IMEI பயன்படுத்தி செய்யப்படும்.

இதுவரை இலங்கையில் IMEI மூல கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. அந்நிலை தற்போது மாறுகிறது.

களவாக இறக்குமதி செய்யப்படும் தொலைபேசிகள், வெளிநாட்டு உறவினர்/நண்பர்கள் எடுத்துவந்து வழங்கும் தொலைபேசிகள் மூலம் இலங்கை அரசு இறக்குமதி வரியை இழக்கிறது. அதையே தடுக்க முனைகிறது அரசு.

அதனால் முறைப்படி இறக்குமதி செய்யாத தொலைபேசிகளுக்கு விரைவில் இலங்கை தொலைபேசி நிறுவனங்கள் சேவை வழங்க மறுக்கும்.

ஆனாலும் 2025ம் ஆண்டு ஜனவரி 28ம் திகதிக்கு முன்னர் இலங்கையில் சேவைக்கு வந்திருந்த, பயன்படுத்தப்பட்ட தொலைபேசிகளுக்கு இந்த தடை இருக்காது என்றும் கூறப்படுகிறது.

அத்துடன் வெளிநாட்டவர் தமது வெளிநாட்டு தொலைபேசிகளை இலங்கையில் பயன்படுத்துவதிலும் தடை இருக்காது. அவர்களின் தொலைபேசிகள் அவர்களின் வெளிநாட்டு சேவை நிறுவங்களால் உறுதி செய்யப்படும்.

இந்த புதிய IMEI கட்டுப்பாடு locking நடைமுறை அல்ல. இது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் தொலைபேசிகளை கட்டுப்படுத்த செய்யப்படும் பொறிமுறையே.

இந்த பொறிமுறை திருட்டுப்போன தொலைபேசிகளின் பயன்பாட்டை தடுக்கவும் உதவும்.

IMEI இலக்கம் தொலைபேசிக்கு உரித்தானதுபோல், IMSI என்ற இன்னோர் இலக்கம் SIM அட்டைக்கு உரித்தானதாக உள்ளது. ஒரு SIM அட்டையை ஒரு தொலைபேசியில் இருந்து இன்னோர் தொலைபேசிக்கு மாற்றும்போது IMSI யும் கூடவே SIM உடன் சென்றுவிடும்.

Dual SIM தொலைபேசிகளில் இரண்டு IMEI இருக்கலாம்.