இந்தியா ரஷ்யாவில் இருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய அளவு மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய இணங்கி உள்ளது. ரஷ்ய சனாதிபதி பூட்டின் ஜனவரி மாதம் இந்திய வர உள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. பூட்டின் தற்போது தனக்கு பாதுகாப்பான நாடுகளுக்கு மட்டுமே செல்கிறார்.
இந்த இணக்கப்படி இந்திய வர்த்தகர் முகேஷ் அம்பானியின் Reliance எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனம் ரஷ்யாவின் Rosneft எரிபொருள் அகழ்வு நிறுவனத்திடம் இருந்து 500,000 bpd (barrels per day) மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்யும்.
இன்றைய மசகு எண்ணெய் விலைப்படி மேற்படி கொள்வனவின் பெறுமதி ஆண்டு ஒன்றுக்கு சுமார் $13 பில்லியன் பெறுமதியாக இருக்கும். இந்த கொள்வனவு 10 ஆண்டுகள் தொடரும். அதனால் மேற்கு நாடுகள் விதித்திருக்கும் தடைகளை எதிர்கொள்ள ரஷ்யாவுக்கு இந்த வருமானம் பெரிதும் உதவும்.
ரஷ்யாவின் இந்த மசகு எண்ணெய் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டாலும் மத்திய கிழக்கு எண்ணெயுடன் ஒப்பிடுகையில் இதை கடல் மூலம் ரஷ்யாவில் இருந்து எடுத்து வர இந்தியாவுக்கு செலவு அதிகமாகும்.
அத்துடன் இந்த இணக்கம் அமெரிக்காவையும், மேற்கு நாடுகளையும் மிகவும் சினம் அடைய செய்யும் என்றாலும் இந்த நாடுகள் இதுவரை கருத்து எதையும் கூறவில்லை. குறிப்பாக ஜனவரி முதல் சனாதிபதி ஆகவுள்ள ரம்பின் கருத்தே பிரதானமானதாக இருக்கும்.