ஆவா பிரதானி பிரசன்னாவின் கனடிய வழக்கு மே மாதம்

ஆவா பிரதானி பிரசன்னாவின் கனடிய வழக்கு மே மாதம்

கனடிய போலீசார் யாழ்ப்பாண ஆவா குழுவின் பிரதானியான பிரசன்னா நல்லலிங்கம் (Prasanna Nallalingam, வயது 32) என்பவரை இந்த ஆண்டு மே மாதமே கைது செய்திருந்தாலும் கனடாவின் Toronto Star பத்திரிகையின் விசாரணை ஒன்று காரணமாக தற்போதே அவரின் அடையாளம் பகிரங்கத்துக்கு வந்துள்ளது. இவர் சிலவேளைகளில் தன்னை அஜந்தன் சுப்பிரமணியம் என்றும் அழைத்துள்ளார்.

இவர் விரைவில் பிரான்ஸ் நாட்டுக்கு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளுக்காக கனடாவில் இருந்து நாடு கடத்தப்படலாம்.

யாழ்ப்பாணத்தில் பல வன்முறைகளில் ஈடுபட்ட பிரசன்னா நல்லலிங்கம் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற சிவகுமாரன் ஜீவரத்னம் கொலை தொடர்பாக இலங்கை போலீசால் தேடப்பட்டு இருந்தார். அதனால் இவர் பின்னர் பிரான்சுக்கு தப்பி ஓடியுள்ளார். அக்கொலை தொடர்பாக இவருக்கு எதிராக இன்டர்போலின் கைது அறிவிப்பும் உள்ளது.

பிரான்ஸ் சென்ற இவர் பாரிஸ் நகருக்கு வடக்கே உள்ள La Courneuve பகுதியிலும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளார். அங்கேயே இவர் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி அபிராமன் பாலகிருஷ்ணன் என்பவரை கத்திகள் கொண்டு கொலை செய்து, இன்னொருவரையும் கொலை செய்ய முனைந்துள்ளார் என்கிறது இவருக்கு எதிரான வழக்கு. மேற்படி இருவரும் வந்த வாகனத்தை பிரசன்னாவும் மேலும் 5 பேரும் தாக்கிய வேளையிலேயே அபிராமன் மரணித்துள்ளார்.

பிரசன்னா 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்கா மூலம் பொய் பெயரில் Quebec மாநில எல்லை வழியே கனடா சென்று அகதியாக பதிந்துள்ளார். கனடாவில் அகதி விசாரணை ஒன்றுக்கு செல்லாத காரணத்தால் போலீசார் இவரை தேடி பிடித்துள்ளனர். கனடிய போலீசார் இவரின் கை ரேகையை இன்டர்போல் தரவுகளுடன் ஒப்பீடு செய்த பொழுதே இவரின் பின்னணி தெளிவானது.

இன்டர்போல் தேடும் இவர் எவ்வாறு அமெரிக்கா சென்றார் என்பது அறியப்படவில்லை. அமெரிக்கா செல்லும் புதியவர்கள் கைரேகை வழங்குவது அவசியம்.

பிரசன்னாவுக்கு 2019ம் ஆண்டும் ஒரு வன்முறை குற்ற வழக்கு தீர்ப்பாக பிரெஞ்சு நீதிமன்றம் 6 மாத கால சிறை தண்டனை வழங்கியிருந்தது. பின்னர் 2021ம் ஆண்டு இவர் பாரிஸ் நகரில் உள்ள உணவகம் ஒன்றுள் நுழைந்து வன்முறை செய்த காரணத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறாயின் இவர் பின்னர் இலங்கைக்கு திரும்பி மீண்டும் பிரான்சுக்கு வந்திருக்கலாம்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் சிலர் ஆவா குழு இலங்கை இராணுவத்தின் சூழ்ச்சி என்றே கருதி இருந்தனர்.