தமிழ், குறிப்பாக யாழ்ப்பாண தமிழ் தன்னை புத்திசாலி என்று நிறுவ சிங்களத்தை ‘மோட்டு சிங்களம்’ என்று கூறும். ஆனால் தற்கால நிகழ்வுகள் தமிழர் தான் மூடர் என எண்ண வைக்கிறது.
வல்வெட்டித்துறையிலிருந்து ஹாட்லி கல்லூரிக்கு வந்த மாணவன் ஒருவன் தனது 6ம் ஆண்டில் ஒரு வகுப்பறை நாடகம் நிகழ்த்தினான். அந்த நாடகத்தின் பிரதான நோக்கம் சிங்களவன் ஒரு மூடன் என நிறுவதே. நாடகத்தின் பெயர் “சொன்னதை செய்யும் பாண்டா”. யாழ்ப்பாணத்தில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட சிங்கள ‘வேலைக்கார பையன்’ கதை அது.
வீட்டுக்கு ஒரு விருந்தினர் வந்த வேளை எசமான் (வல்வெட்டித்துறை மாணவன்) சிங்கள வேலைக்கார பையனிடம் விருந்தினருக்கு வழங்க “ஒரு சோடா உடைத்து வா” என்று கூறுவார். அந்த சிங்கள பையன் ஒரு சோடா போத்தலை உடைத்து கண்ணாடி துண்டுகளுடன் வருவான். நாடகம் முழுவதும் இதே தொனி. அந்த வல்வெட்டித்துறை மாணவன் பின்னர் புலிகளில் இணைந்து, கோப்பாய் பகுதில் களப்பலி ஆகினான்.
இந்த மாணவனுக்கு தெரிந்த சிங்களவர் வல்வெட்டித்துறை பகுதில் இருந்த சிங்கள படையினரும், போலீசாரும் மட்டுமே. இவனுக்கோ அல்லது இவனின் குடும்பத்துக்கோ சாதாரண சிங்கள குடும்பங்களை தெரிந்து இருக்கவில்லை. அதனால் இவன் தான் அறிந்த சிங்கள இராணுவத்தின் குணத்தை கொண்டே சிங்கள மக்களின் குணத்தை ஊகித்து இருந்தான். இவ்வாறு செய்வது IPKF யின் குணம் மூலம் மகாத்மா காந்தியின் குணத்தை அறிவது போன்றது. பிரபாகரனும் மூன்றாம் நபர் கதைகள் மூலமே சிங்களத்தை அறிந்து இருந்தார். இவர்கள் நல்ல சிங்களவர் எவரையும் தமது வாழ்வில் அறிந்திருக்கவில்லை. சிலர் ஆனையிறவு, கிளிநொச்சி, வவுனியாவுக்கு அப்பால் என்றைக்குமே சென்றும் இருக்கவில்லை.
1983ம் ஆண்டு ஜே.ஆரின் அரச ஆதரவுடன் நிகழ்ந்த இன கலவர காலத்தில் எத்தனை தமிழர் ஆபத்தின் மத்தியிலும் சிங்களவரால் பாதுகாக்கப்பட்டனர் என்று கணிப்பிடுங்கள். அத்துடன் புலிகள் ஏனைய இயக்கங்களை கொன்று குவித்த காலத்தில் எத்தனை தமிழர் சகோதர இயக்க உறுப்பினரை பாதுகாத்தனர் என்றும் கணித்து முன்னைய கணிப்புடன் ஒப்பிட்டு பாருங்கள்.
இரண்டாம் உலக போருக்கு பின் ஹிட்லருக்கு அடுத்ததாக படுதோல்வி அடைந்தது புலிகள் தலைமையிலான இலங்கை தமிழர் போராட்டமே. ஜப்பானுக்கு சரண் அடையும் உரிமையாவது கிடந்தது. புலிகளுக்கு அதுவும் கிடைக்கவில்லை.
மேதகு என்று அழைக்கப்படும் தலைமை இயங்கிய தமிழர் போராட்டம் உடுத்திருந்ததும் உரிந்த நிலையில் முடிய, குறிப்பிடக்கூடிய ஒரு ‘தலைவர்’ அல்லது ‘கொடி’ இல்லாத சிங்களத்தின் GotaGoHome போராட்டம் மகிந்த, கோட்டா மட்டுமன்றி அவர்களின் குடும்பங்களையே ஆயுதம், வன்முறை இன்று விரட்டி உள்ளது. வெள்ளை van கோட்டாவை எவரும் அணுக முடியாது என்று இலங்கை மட்டுமல்ல, உலகமே எண்ணி இருந்தது. ஆனால் பொது நோக்கத்திலேயே கண்ணாய் இருந்த சிங்களம் கோட்டவை இலகுவில் விரட்டி உள்ளது. தமிழர் தம் இயக்க தலைமையில் கண்னாய் பிரிந்து இருந்தனர், சிங்களவர் நோக்கத்தில் கண்னாய் ஒற்றுமையுடன் இருந்தனர்.
தமிழ் போராட்டம் ஆளுக்கொரு இயக்கமாக, இயக்கத்துக்கு ஒரு கொடியாக ஆரம்பித்தது. ஆனால் GotaGoHome ஆரம்பத்தில் இருந்து ஒரு அங்கமாகவே இயங்கியது, இயக்க கொடி பிடிக்காது தேசிய கொடியையே உயர்த்தி பிடித்தது. தமிழில் தேசிய கீதம் படக்கூடாது என்று சிங்கள வாதம் தலை தூக்கிய வேளை அந்த பிக்குகளை வெளியேற்றியது. ஆனால் பிரிவிலேயே ஆரம்பித்த தமிழ் இயக்கங்கள் இந்திய அரசியல் சாக்கடையில் வீழ்ந்து தம்மை மட்டும் வளர்க்க முனைந்தன.
ஒரு திரைப்படத்தில் ‘கையால் ஆகாதவன் தான் தன் அப்பா பெயரை கைத்தடியாக உபயோகிப்பான்” என்று கூறப்பட்டுள்ளது. தற்கால தமிழரும், தமிழ்நாட்டு தமிழர் உட்பட, தம் புகழ்பாட ‘கல் தோன்றி, முன்தோன்றிய” என்று ஆரம்பிப்பார். காரணம் அண்மைக்கால தமிழரின் சாதனைகள் எதுவும் இல்லை. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் புத்திசாலிகள் தான். ஆனால் அவர்களின் அறிவின் சிறு துளியும் தற்கால தமிழரிடம் இல்லை. வெள்ளையன் theory களை படித்து, பட்டம் பெறுவது நல்ல தொழிலை அடையவும், சீதனம் பெறவும் மட்டுமே பயன்பட்டன. இவர்களின் பொது அறிவு வளரவில்லை. அதனாலே தமிழரின் போராட்டம் அவலமான தோல்வியில் முடிந்தது.
அடுத்து வருவது எது என்று தெரியாவிட்டாலும், சிங்களம் தான் எடுத்த காரியத்தை நன்றே முடித்து உள்ளது.
(இளவழகன், July 10, 2022)