சனி முதல் கனடா, மெக்ஸிகோவுக்கு ரம்ப் 25% வரி, சீனாவுக்கு 10%

சனி முதல் கனடா, மெக்ஸிகோவுக்கு ரம்ப் 25% வரி, சீனாவுக்கு 10%

சனிக்கிழமை முதல் கனடாவிலும், மெக்ஸிக்கோவிலும் இருந்து அமெரிக்காவுள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% மேலதிக இறக்குமதி வரி (tariffs) அறவிடப்படும் என்றும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% மேலதிக இறக்குமதி வரி அறவிடப்படும் என்று ரம்ப் அரசு கூறியுள்ளது.

இந்த வரிகளுக்கு உட்படும் பொருட்களின் பட்டியல் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்த வரிகளால் இவ்வகை பொருட்களின் விலை அமெரிக்காவில் அதிகரிக்கும். இந்த மேலதிக தொகையை இறக்குமதியாளர் அமெரிக்க பாவனையாளரிடம் அறவிடுவார். அத்துடன் இந்த பொருட்களின் விலை உயர, இவற்றின் பாவனை குறையும்.

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எரிபொருள், புதிய வாகனம், மரக்கறி, பழவகை போன்ற பல பொருட்கள் இறக்குமதி/ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கார் போன்ற வாகன பாகங்கள் பல தடவைகள் கனடா, அமெரிக்கா, மெக்ஸிக்கோ இடையே பயணித்த இறுதியில் வாகனம் பொருத்தப்படுகிறது. இவற்றுக்கு எவ்வாறு வரி அறவிடப்படும் என்று ரம்ப் கூறவில்லை. அவற்றை சிந்திக்கும் அறிவு ரம்பிடம் இல்லை.

அத்துடன் அமெரிக்கா கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் எண்ணெய் முதலாம் இடத்தில் உள்ளது. இந்த வரியால் எரிபொருள் விலை அமெரிக்காவில் அதிகரிப்பது அமெரிக்காவுக்கு ஆபத்து என்பதால் ரம்ப் கனடிய எரிபொருளுக்கு வரியை அறவிடாது இருக்க முனையலாம்.

ரம்ப் எரிபொருளுக்கு இறக்குமதி வரியை நடைமுறை செய்யாது இருந்தாலும், கனடா பதிலடியாக அமெரிக்காவுக்கான எரிபொருளுக்கு ஏற்றுமதி வரி அறவிட்டு எதிர்ப்பை காட்டலாம்.

அமெரிக்கா தினமும் 13.5 மில்லியன் பரல் எண்ணெய்யை உற்பத்தி செய்கிறது. அத்துடன் கனடாவில் இருந்து தினமும் 13.5 மில்லியன் பரல் எணெய்யை இறக்குமதி செய்கிறது. 2023ம் ஆண்டு அமெரிக்கா கனடாவில் இருந்து $108.3 பில்லியன் பெறுமதியான எரிபொருளை இறக்குமதி செய்திருந்தது.

அடுத்த கிழமை அளவில் ரம்பின் இந்த கூத்தின் விளைவுகள் தெரியவரும்.